சாகர் ராணா கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷீல் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
நம் நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்களில் ஒருவர் சுஷில் குமார். இவர் கடந்த 2008 ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்றார். அதன்பிறகு 2012 லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்நிலையில் தான் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் தொடக்கத்தில் டெல்லி சத்ரசல் ஸ்டேடியத்தில் தகராறு ஏற்பட்டது. அப்போது ஹரியானா மாநிம் ரோடாக்கை சேர்ந்த 23 வயது நிரம்பிய மல்யுத்த வீரர் சாகர் தன்கர் கொலை செய்யப்பட்டார். அவரை சுஷில் குமார் தரப்பினர் கடுமையாக தாக்கியதாகவும், பெருமூளையில் ஏற்பட்ட பாதிப்பால் சாகர் தன்கர் இறந்ததாகவும் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி போலீசார் 18 நாட்கள் கழித்து மல்யுத்த வீரர் சுஷில் குமாரை கைது செய்தனர். போலீசாரிடம் சிக்காமல் அவர் பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா உள்ளிட்ட இடங்களில் சுற்றி வந்தார். 2021 மே 23ம் தேதி முந்த்கா பகுதியில் சுஷில் குமார் ஒருவரிடம் பணம் வாங்க வந்தபோது டெல்லி போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ரயில்வே பணியில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் கிடைக்காத நிலை இருந்தது. டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. ஆனால் விசாரைண தாமதமான நிலையில் சுஷில் குமார் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2021ம் ஆண்டு முதல் தொடர்ந்து சிறையில் இருப்பதாகவும், வழக்கு விசாரணை தாமதப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.
மேலும் தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 4ம் தேதி சுஷில் குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கொலையான சாகர் தன்கர் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரே் லமற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுஷில் குமாரின் ஜாமீனை அதிரடியாக ரத்து செய்தனர். மேலும் ஒருவாரத்தில் போலீசில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனால் சுஷில் குமார் மீண்டும் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.