புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது விராலிமலை. இங்குள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் பகுதியில் ஏராளமான மயில்கள் வசிக்கின்றன. எனவே இங்கு மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று கொடும்பாளூர் என்ற கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம் (38) என்பவர் தேசிய கொடியுடன் கோவில் கோபுரத்தில் ஏறினார். அவர் கோபுரத்தில் ஏறியதை யாரும் கவனிக்கவில்லை.
கோபுரத்தில் ஏறியதும் அங்கிருந்து தனது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் போட்டார். மயிலுக்கு சரணாலயம் அமைக்க வேண்டும். கோவிலை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அவர் கோஷம் போட்டார். தகவல் அறிந்ததும் அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்களும், கோவில் நிர்வாகிகளும் அங்கு வந்து ஆறுமுகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அவரை கீழே இறங்கி வரும்படி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட ஆறுமுகம் கீழே இறங்க சம்மதித்து மெதுவாக கீழே இறங்கினார். திடீரென எதிர்பாராதவிதமாக அவரது கால்கள் வழுக்கி கீழே விழுந்தார். இதில் ஆறுமும் அந்த இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் அங்கு வந்த ஆறுமுகம் உடலை கைபற்றி விசாரணை மேற்கொண்டனர்.