நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜகவில் மூத்த தலைவராக இருந்தவருமான இல.கணேசன் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த இல.கணேசன் இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80). அண்மையில் சென்னை வந்திருந்த நிலையில் வீட்டில் அவர் கால் தவறி கிழே விழுந்ததில், அவரது தலையில் பலத்த அடிபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவர் விரைவில் நலம்பெற்று, மீண்டும் நல்ல உடல்நிலைக்கு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இல.கணேசன் இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் மணிப்பூர் ஆளுநராக இருந்த நிலையில், தற்போது நாகலாந்து ஆளுநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1945 ஆம் ஆண்டு பிறந்த இல.கணேசன் பாஜகவின் மூத்த தலைவர் ஆவார். சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அந்த அமைப்பில் ஈடுபட்டு வந்த இல.கணேசன் பின்னர் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
பின்னர் தமிழக பாஜக-வின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். பாஜகவின் தேசிய செயலாளர், துணை தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார். ராஜ்யசபா உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்.
பாஜகவில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்து வந்த இல.கணேசனை கடந்த 2021 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் மேற்கு வங்கத்திற்கும் ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். பின்னர், 2023 ஆம் ஆண்டு நாகலாந்து மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.