Skip to content

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான  விளையாட்டு போட்டி.. அரியலூரில் தொடக்கம்

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரியலூர் மாவட்டத்தின் சார்பாக 2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  இன்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஷ் பாலசுப்ரமணியம் சாஸ்திரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் தனி நபர்களுக்கு விளையாட்டுகளை முழு திறனுடன் அணுகவும் அவர்கள் உயர்மட்ட போட்டிகளில் பங்குபெற்று சிறப்படையவும் வாய்ப்புகளை தமழ்நாடு அரசு வழங்குகிறது. மேலும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலனின் மேம்பாட்டில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு பல்வேறு திட்டங்களுக்கு தொடர்ந்து நிதி உதவிகளையும் வழங்கி வருகிறது. மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது,

 

மாணவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை போலவே விளையாட்டுப் போட்டிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என  தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏனென்றால் உடல்நலனை பாதுகாப்பதில் விளையாட்டு போட்டிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி வெவ்வேறு புதிய விளையாட்டுப்போட்டிகள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையானது மிக முக்கியமான துறைகளுள் ஒன்றாக விளங்குகிறது. சர்வதேச அளவிலான சதுரங்கப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்திட அனுமதி வழங்கப்பட்டு அவை சிறப்பாக திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. விளையாட்டு வீரர்கள் மாநில அளவில், தேசிய அளவில் மற்றும் உலக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றிப்பெறவேண்டும். அதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெறவேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

தமிழ்நாட்டில் ஹாக்கி விளையாட்டில் சிறந்த மாவட்டமாக அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் திகழ்கிறது. இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஹாக்கி வீரர் கார்த்திக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்திற்கு வருகைபுரிந்த போது அவரது இல்லத்திற்கே சென்று வீடு வழங்குவதற்கான ஆணையை வழங்கினார்.

 

இதேபோன்று சென்னையை சேர்ந்த கேரம் விளையாட்டு வீராங்கனை வெளிநாட்டில் நடைபெறும் போட்டியில் குடும்ப பொருளாதார சூழல் காரணமாக கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டபோது தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு அவர் வெளிநாட்டிற்கு சென்று கேரம் போட்டியில் வெற்றிபெற்று நாடு திரும்பினர். உடனடியாக கேரம் விளையாட்டு வீராங்கனைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். எனவே மாணவ, மாணவிகள் அனைவரும் விளையாட்டு ஆர்வத்தினை வளர்த்து கொள்ளவேண்டும். போட்டிகளில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் அதனை அடுத்தப் போட்டிக்கு பயிற்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். வீரர், வீராங்கனைகள் முயற்சியும், பயிற்சியும் பெற்று, வெற்றிப் பெற வேண்டும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்

சா.சி.சிவசங்கர்  தெரிவித்தார்.

 

மேலும், மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000-ம், இரண்டாம் பரிசாக ரூ.2,000-ம், மூன்றாம் பரிசாக ரூ.1,000-ம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். மாநில அளவில் தனிநபர் போட்டியில் பெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75,000-ம், மூன்றாம் பரிசாக ரூ.50,000-ம் வழங்கப்படும். குழுப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75,000-ம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50,000-ம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25,000-ம் பரிசாக வழங்கப்பட உள்ளது.  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சீரிய முயற்சியால் இவ்வாண்டுக்கான தனிநபர் மற்றும் குழுப்போட்டிகளுக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.37 கோடி வழங்கப்படுகின்றது. போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். இது தவிர கடந்த

ஆண்டு 83 வீரர், வீராங்கனைகளுக்கு சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு தகுதி அடிப்படையில் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

 

விளையாட்டுப்போட்டிகள் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கம் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் இன்று முதல் துவங்கி வருகின்ற 12.09.2025 வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு மாவட்டம் முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணாக்கர்களும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுபிரிவினர், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 53,881 வீரர்கள் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருங்கால இந்தியாவின் விளையாட்டின் தலைநகரமாக தமிழ்நாடு திகழும் வகையில் பல்வேறு பன்னாட்டு அளவிலான போட்டிகள், தேசிய அளவிலான போட்டிகள், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள், விளையாட்டு வீரர்களுக்கான உயரிய ஊக்க தொகை போன்ற திட்டங்கள் சீரிய முயற்சியால் நடத்தி வருவது விளையாட்டு வீரர்களிடையே நம்பிக்கை மற்றும் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கியுள்ளது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் மாணாக்கர்கள் பங்குபெற்று தங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி பரிசு தொகை மற்றும் பதக்கம் பெறவும், மாவட்ட அளவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று அதிக அளவிலான பதக்கங்களை வென்று அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ) பாலசுப்ரமணியம், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!