கேரளா மாநிலத்தை சேர்ந்த மலையாள ராப் பாடகர் ஹிரந்தாஸ் முரளி, புனைப்பெயர் வேடன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில், செப்டம்பர் 9, 2025 அன்று கொச்சி திரிக்காக்கரா காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். கேரள உயர்நீதிமன்றம், ஆகஸ்ட் 27, 2025 அன்று வேடனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரு நாட்களுக்கு விசாரணை அதிகாரியின் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
புகாரளித்த பெண் மருத்துவர், 2021 முதல் 2023 வரை கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் வேடன் தன்னை திருமணம் செய்ய உறுதியளித்து பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவர் வேடனுக்கு தனது முதல் ஆல்பம் மற்றும் பயண செலவுகளுக்கு ரூ.31,000 உள்ளிட்ட நிதி உதவிகளை வழங்கியதாகவும், இருவரும் சிறிது காலம் ஒன்றாக வசித்ததாகவும் தெரிவித்தார்.
2023 மார்ச் முதல் வேடன் தன்னை புறக்கணித்ததாகவும், மற்ற பெண்களுடன் உறவு வைத்திருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.வேடனின் வழக்கறிஞர், இந்த உறவு இருவரின் சம்மதத்துடன் இருந்ததாகவும், புகாரளித்தவர் முதலில் வேடனை அவரது ரசிகையாக அணுகியதாகவும் வாதிட்டார். ஆனால், புகாரளித்தவரின் தரப்பு, வேடன் வேறு சில பெண்களையும் இதேபோல் ஏமாற்றியதாக குற்றம்சாட்டியது.
உயர்நீதிமன்றம், ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக பரிசீலிக்க வேண்டும் என்று கூறி, வேடனுக்கு முன்ஜாமீன் வழங்கியது, ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.இந்த வழக்கு தொடர்பாக, வேடன் மீது மற்றொரு பெண் ஆராய்ச்சி மாணவியும் 2020-ல் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்து, ஆகஸ்ட் 21, 2025 அன்று எர்ணாகுளம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் வேடனின் முன்ஜாமீன் மனு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வேடன், செப்டம்பர் 9 அன்று காவல் நிலையத்தில் ஆஜராகும்போது, “நீதிமன்ற உத்தரவின்படி ஊடகங்களிடம் பேச முடியாது, விசாரணைக்குப் பின் பார்ப்போம்,” என்று கூறினார்.