மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள், 2023 நவ., மாத இறுதியில் செத்து மிதந்தன. இதற்கு கார்த்திகை தீபத்தின்போது விளக்கேற்ற பக்தர்கள் பயன்படுத்திய எண்ணெய், தெப்பக்குளத்தில் கலந்து, எண்ணெய் படலமாக மாறியதே காரணம் எனக் கூறப்பட்டது. இது தொடர்பாக நாளிதழ்களில் செய்தி வெளியாயின. அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயத்தின் உத்தரவையடுத்து, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் கவெனிதா தாக்கல் செய்த அறிக்கை:
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் குப்பை கொட்டப்படுவதை தடுக்க, கோவில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தெப்பக் குளத்தின் வடக்குப் பகுதியில் கடைகள் உள்ளன. தெற்குப் பகுதியும் பாதுகாப்பாக உள்ளது. மேற்குப் பகுதியில் காரிய மண்டபம் இருப்பதால், பாதுகாவலர் இருக்கிறார். கிழக்குப் பகுதியில் குப்பை, பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை பொதுமக்கள் வீச வாய்ப்புள்ளது.
இதை தடுக்க தெப்பக்குளத்தைச் சுற்றிலும் உயரமான தடுப்பு வேலி அமைக்க ‘டெண்டர்’ விடப்பட்டுள்ளது. வேலி அமைக்கும் பணிகள் இரண்டு மாதங்களில் முடிக்கப்படும். இதையும் மீறி குளத்திற்குள் குப்பை வீசினால், தமிழ்நாடு கோவில் நுழைவு அங்கீகாரச் சட்டம் 1947ன்படி அபராதம் விதிக்கப்படும். தெப்பக்குளத்தை சுற்றியுள்ள தெருக்கள், சாலைகளை சுத்தம் செய்ய, சென்னை மாநகராட்சி பணியாளர்களை நியமித்துள்ளது. தெப்பக்குளத்தின் தண்ணீரை துாய்மையாக பராமரிக்க, நீர்வளத்துறை உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.