திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அருங்குணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (35) தொழிலாளி. இவர், கடந்த 2018-ம் ஆண்டு 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து வந்தவாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சதீசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். பின்னர் அவரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.