Skip to content

நேபாள சிறைகளில் இருந்து தப்பிய கைதிகள் 60 பேர் இந்திய எல்லையில் கைது

  • by Authour

நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.  இந்த வன்முறையை பயன்படுத்தி சப்தாரி பகுதிக்குட்பட்ட ராஜ்பிராஜ் சிறை உள்பட அங்குள்ள 77 மாவட்டங்களின் சிறைகளில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி சென்றனர். ஒரு சிறையில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 கைதிகள் கொல்லப்பட்டனர். வன்முறை வெடித்ததில் இருந்து பாதுகாப்பு படையினருடனான மோதலில் இதுவரை 8 கைதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

நேபாளத்தில் நடந்த வன்முறை போராட்டங்களை தொடர்ந்து இந்திய எல்லை பகுதிகளில் ராணுவம் கண்காணிப்பை அதிகரித்து உள்ளது. இந்தியாவின் கிழக்கு பகுதியில் 1,751 கி.மீ. நீளமுள்ள பாதுகாப்பு வேலி இல்லாத பகுதி இந்தியா- நேபாள எல்லையை ஒட்டி உள்ளன. இந்த பகுதிகள் பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்குவங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் உள்ளன. இங்கு 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் எல்லை பகுதிகளில் கொடி அணிவகுப்பு, கூட்டு ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. எல்லை பகுதிகளில் இரு நாடுகளின் உண்மையான குடிமக்கள், செல்லுபடியாகும் அடையாள அட்டைகளை பயன்படுத்தி எல்லையை கடக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில் சர்வதேச எல்லை பகுதியில் பல்வேறு இடங்களில் நேபாள நாட்டின் சிறைகளில் இருந்து தப்பிய 60 கைதிகளை பிடித்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்கள் கடந்த 2 நாட்களில் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளத்தின் எல்லை பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அந்தந்த மாநில போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய எல்லைப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளை இந்திய ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.

 

error: Content is protected !!