தஞ்சை அருகே விளார் சாலையில் தலை சிதைக்கப்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (2)ல் சரண் அடைந்தனர்.
தஞ்சாவூர் விளார் சாலை தில்லை நகர் பகுதி பாரதிதாசன் நகர் முதல் தெருவைச் சேர்ந்த சிங்காரவேலன் என்பவரின் மகன் திலகன் (22).
திலகனுக்கும், இந்திரா நகரைச் சேர்ந்த சக்தி (23) என்பவருக்கும் இடையில் கடந்த 7ம் தேதி தகராறு ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திலகன், தனது நண்பர் பாரதிதாசன் நகர் முதல் தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகன் சசிகுமாரை (21) அழைத்துக் கொண்டு கடந்த 9ம் தேதி கலைஞர் நகர் முதல் தெருவுக்கு சென்று உள்ளார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சசிகுமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து வல்லம் டிஎஸ்பி., கணேஷ்குமார் உத்தரவின் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திரா நகரைச் சேர்ந்த சக்தி, கோகுல், ராஜா, பிரபா, சஞ்சய் உள்பட 11 பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் (2) ல் இந்திரா நகர் பிரபு என்பவரின் மகன் ஹரிஹரன் (எ) சக்தி (20), அவரது தம்பி கோகுல் (19), அண்ணாநகர் 10ம் தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சஞ்சய் (19), இபி காலனி செந்தமிழ் நகர் ராஜா என்பவரின் மகன் பிரபாகர் (20) ஆகிய 4 பேரும் சரண் அடைந்தனர். இவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.