இங்கிலாந்தில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் மீது இனவெறி தாக்குதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் வெஸ்ட் மிட்லெண்ட் மாகாணம் ஓல்ட்பெரி பகுதியில் உள்ள பூங்காவில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் (20) நேற்று முன் தினம் காலை 8.30 மணியளவில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற 2 பேர் அவரை கடுமையாக தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இங்கிலாந்தை விட்டு வெளியேறி உனது நாட்டிற்கு செல் என்று கூறி இளம்பெண்ணை 2 பேரும் தாக்கியுள்ளனர்.
தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்திய இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த தாக்குதல், பாலியல் வன்கொடுமை சம்பவம் இனவெறி ரீதியில் நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.