Skip to content

கார் மோதி மத்திய நிதித்துறை மூத்த அதிகாரி பலி

டெல்லியின் ஹரி நகரை சேர்ந்தவர் நவ்ஜத் சிங் (52). இவர் மத்திய நிதித்துறையின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் பிரிவில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், நவ்ஜத் சிங் அவரது மனைவியுடன் நேற்று மாலை பைக்கில் தலா ஹுன் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு மதவழிபாடு நடத்த சென்றுள்ளார். வழிபாடு நடத்திவிட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

டெல்லி கண்டோன்மண்ட் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள ரிங் ரோடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வேகமாக வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார் நவ்ஜத் சிங்கின் பைக் மீது மோதியது. இந்த கோர விபத்தில் பைக்கில் பயணித்த நவ்ஜத் சிங்கும் அவரது மனைவியும் படுகாயமடைந்தனர். சொகுசு காரை குருகிராமை சேர்ந்த தொழிலதிபர் பரிக்‌ஷித் மங்கரின் மனைவி ககன்பிரீத் ஓட்டியுள்ளார். காருக்குள் பரிக்‌ஷித் மன்கர் மற்றும் 2 பிள்ளைகள் இருந்துள்ளனர். இந்த விபத்தில் காரை ஒட்டிய ககன்பிரீத் அவரது கணவர் பரிக்‌ஷித் மன்கரும் காயமடைந்தனர்.

இதையடுத்து, விபத்தில் காயமடைந்த நவ்ஜத் சிங், அவரது மனைவி மற்றும் சொகுசு காரில் வந்த பரிக்‌ஷித் மங்கர் மற்றும் அவரது மனைவி ககன்பிரீத் ஆகிய 4 பேரையும் அப்பகுதியில் சென்ற குல்பன் என்பவர் தனது வேனில் அசாத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். விபத்து நடைபெற்ற பகுதியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த தனியார் மருத்துவமனை உள்ளது.

விபத்தில் நவ்ஜத் சிங் படுகாயமடைந்த நிலையில் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்குமாறு நவ்ஜத்தின் மனைவி வேன் டிரைவர் குல்பனிடம் கூறியுள்ளார். ஆனால், தொழிலதிபர் தம்பதி மங்கர் மற்றும் ககன்பிரீத் அனைவரையும் தங்கள் உறவினரின் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி வலியுறுத்தியுள்ளார். இதனால், 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து ககன்பிரீத்தின் உறவினர் மருத்துவமனையில் 4 பேரையும் குல்பன் அனுமதித்துள்ளார்.

ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 நிமிடங்களில் நவ்ஜத் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நவ்ஜத் சிங்கின் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ககன்பிரீத் மற்றும் அவரது கணவரான தொழிலதிபர் பரிக்‌ஷித் மங்கர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விபத்தை ஏற்படுத்தியது மற்றும் தனது கணவர் படுகாயமடைந்தபோதும் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கமால் வேனில் 22 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்கள் உறவினரின் மருத்துவமனையில் அனுமதித்தது, இதனால் ஏற்பட்ட கால தாமதமே தனது கணவரின் உயிரிழப்பிற்கு காரணம் என நவ்ஜத் சிங்கின் மனைவி போலீசில் தெரிவித்தார்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய தொழிலதிபர் பரிக்‌ஷித் மங்கர் மற்றும் அவரது மனைவி ககன்பிரீத் மீது புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், லேசான காயங்களுக்கு சிகிச்சை பெற்ற ககன்பிரீத்தை மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்தபின் கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய ககன்பிரீத் மற்றும் அவரது கணவரான தொழிலதிபர் பரிக்‌ஷித் மங்கரின் புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை.

 

error: Content is protected !!