அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(40) விவசாயியான இவர் வெள்ளாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று கண்ணன் அவரது விவசாய நிலத்தில் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு கட்டி விட்டு வெளியில் சென்றுவிட்டார். அங்கு வந்த நாய் ஒன்று விவசாய நிலத்தில் கட்டி வைத்திருந்த வெள்ளாடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் படுகாயமடைந்த 6 வெள்ளாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. அருகில் வயலில் இருந்தவர்கள் ஆறு ஆடுகள் இறந்து
கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கண்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கண்ணன், கால்நடை மருத்துவர் வீரேந்திரனுக்கு தகவல் தெரிவித்தார். கால்நடை மருத்துவர் வீரேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் இறந்த வெள்ளாடுகளை சம்பவ இடத்திலேயே உடல்கூறு ஆய்வு செய்தார். பின்னர் கால்நடை மருத்துவர்கள் முன்னிலையில் அப்பகுதியில் இறந்த ஆடுகள் ஆறும் புதைக்கப்பட்டன. சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள 6 ஆடுகள் நாய்கள் கடித்து இறந்து போன சம்பவத்தில் விவசாயி கண்ணனுக்கு பெரும் நஷ்டத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.