பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46), சென்னையில் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 18, 2025 அன்று காலமானார். நேற்று டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்த அவர், சென்னை தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இரவு 8:30 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் அவரது உடல்நிலையை பாதித்ததாக கூறப்படுகிறது.ரோபோ சங்கர், விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’, ‘கன்னி தீவு’ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். ‘விஸ்வாசம்’, ‘மாரி’, ‘வேலைக்காரன்’, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனித்துவமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அவரது ரோபோ ஸ்டைல் காமெடி, தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்தது.ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமா மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், கமல் ஹாசன் உள்ளிட்ட பலர் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்தனர். அவரது இறுதிச் சடங்கு செப்டம்பர் 19, 2025 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.
பலரும் சமூக வலைதளங்களின் மூலம் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.
நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என சோகத்துடன் தெரிவித்துள்ளார்.