அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா-2025 விழிப்புணர்வு பேரணியனை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்து, ஊட்டச்சத்து உணவுப் பொருள் கண்காட்சியினையும் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்துகொண்டார்.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 17.06.2025 முதல் 16.10.2025 வரை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆரோக்கியமான பெண், வலிமையான குடும்பம் என்பதை வலியுறுத்தும் வகையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா-2025 விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி துவக்கி வைத்து, ஊட்டச்சத்து மாத உணவுப் பொருள் கண்காட்சியினை பார்வையிட்டார்.
மேலும், ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மைய பணியாளர்கள் கலந்துகொண்டு ஊட்டச்சத்து மிக்க பாரதத்தை உருவாக்க ஒன்றாக இணைவோம், இரத்த சோகை நீங்க சத்தான உணவை அறிந்திடுவோம், சிறுதானிய உணவை தினமும் சேர்த்திடு சிறந்த வாழ்வை பெற்றிடு, ஆரோக்கிய கல்வி நமது அங்கன்வாடி கல்வி, ஊட்டச்சத்து திட்டமே உன்னதமான வாழ்வின் அடையாளமே, ஊட்டச்சசத்துடன் இருந்திடு உன் உடல்நலத்தை காத்திடு, சர்க்கரை எண்ணெய் உப்பு உபயோகம் குறைப்போம் உடல் பருமனை தவிர்ப்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் முழக்கமிட்டும் சென்றனர்.
மேலும், ஊட்டச்சத்து உணவுப் பொருள் கண்காட்சியில் 0-5 வரை குழந்தைகளின் சராசரி எடை மற்றும் உயரம், இரத்த சோகை, சக்தி தரும் உணவுகள், வளர்ச்சி தரும் உணவுகள், சாப்பிடக்கூடிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள், சத்தான உணவுகள், சத்தான காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்து தகவல்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. மேலும், எனவே, பொதுமக்கள் அனைவரும் ஊட்டச்சத்து மாத விழாவில் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பெற்று நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.
முன்னதாக, ஊட்டச்சத்து உணவுகளின் அவசியம் குறித்த உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி வாசிக்க, அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கன்வாடி பணியாளர்கள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், மாவட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கோ.அன்பரசி, அங்கன்வாடி மைய பணியாளர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.