திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் முன்பாக இன்று 1968 ல் ரயில்வே தொழிலாளர்கள் நலனுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூட்டில் இன்னுயிர் நீத்த 17 தொழிலாளர்களின் நினைவாக எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் வீரவணக்க நாள் கூட்டம் நடந்தது.அதன் பின்னர் 8-வது சம்பள கமிஷன் கமிட்டியை காலதாமதம் இன்றி அமைக்க வேண்டும். 1 -1- 2026 முதல் புதிய சம்பள விகிதங்களை அமல்படுத்த வேண்டும். பைனான்ஸ் பில் 2025, வாலிடேஷன் என்ற சட்ட மசோதாவை காரணம் காட்டி 1.1-2026 அன்று தரவேண்டிய புதிய சம்பளத்தை வேறு தேதிக்கு மாற்றும் எண்ணத்தை கைவிட வேண்டும். அனைத்து காலி பணியிடங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ். ஆர்.எம்.யூ. தொழிற்சங்க துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தின் காரணமாக பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
