நாடு முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்து உள்ளது. இதில் தமிழகத்தில் 42 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளின் எண்ணிக்கை 2,046 ஆக குறைந்திருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு காரணம், இந்தக் கட்சிகள் 2019 முதல் தொடர்ந்து 6 ஆண்டுகளாக எந்தத் தேர்தலிலும் போட்டியிடாதது உள்ளிட்ட விதிமீறல்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவுக்கு சில அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ”பதிவை ரத்து செய்து தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை சட்ட விரோதமானது. கட்சிகள் அனைத்து தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி, ”தேர்தலில் போட்டியிடவில்லை என்ற ஒரே காரணத்திற்காக ஒரு கட்சியின் பதிவை ரத்து செய்ய முடியாது. ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கிறது தேர்தல் ஆணையம்” என்று குறியிருக்கிறார்.