ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே உள்ள புஷ்கர், புனித யாத்திரைக்கு பெயர்பெற்ற இடமாகும். இங்குள்ள ஓட்டலில் சுற்றுலாப் பயணிகள் சிலர் ரும் எடுத்து தங்கி இருப்பார்கள். அந்த ஓட்டலில் 2-வது மாடியில் தங்கியிருந்த அவர்களில் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது கழிவறையின் கோப்பைக்குள் பெரிய பாம்பு ஒன்று படமெடுத்து நிற்பதை கண்டு அதிச்சியானார். அதிர்ஷ்டவசமாக செல்போனை பார்த்துக்கொண்டே உட்கார முயற்சிக்கவில்லை. கழிவறை திறந்தே இருந்துள்ளது. கழிவறை கோப்பையில் அமரும் முன்பாக பாம்பு படம் எடுத்தபடி நின்று இருப்பதை பார்த்துவிட்டார்.
உடனே உஷாரான அவர், கழிவறை கதவை திறந்துகொண்டு உதவிக்கு ஆட்களை அழைத்ததுடன், பாம்பை செல்போனில் படம் பிடித்தார். அவரது சத்தம் கேட்டு அறையில் இருந்த மற்றவர்களும் வந்து கழிவறையை எட்டிப்பார்த்தபடி பேசுகிறார்கள். கருப்பு நிற நாகப்பாம்பான அது,அங்கு வந்தவர்களை கண்டு கொஞ்சம் கூட அச்சம் அடையாமல் படமெடுத்து சீறியபடி நிற்கிறது.
பின்னர் இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து சிறிது நேர போராட்டத்துக்குப் பின், கழிவறையில் இருந்து 5 அடி நீள விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பை பத்திரமாக மீட்டார்கள். 2-வது மாடியில் உள்ள கழிவறை கோப்பைக்குள் பாம்பு எப்படி வந்தது என்று பலரும் வனத்துறையினரிடம் கேட்டார்கள். எலி, தவளை போன்ற ஏதாவது இரையை துரத்திக் கொண்டு கழிவறை குழாய் வழியாக பாம்பு மேலே ஏறி வந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக யாரையும் பாம்பு கடிக்கவில்லை. நாகப்பாம்பு கழிவறை கோப்பையில் இருந்து சீறும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.