கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தை பொக்ளின் கொண்டு சுத்தம் செய்துள்ளனர் இளைஞர்கள் – அதனை வீடியோவாக ஒளிப்பதிவு செய்த இளைஞர்கள் தவெக சார்பில் பள்ளி வளாகம் சுத்தம் செய்ததாக கூறி ரீல்ஸ் வெளியிட்ட நிலையில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் தென்னிலையில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளிக்கு சென்ற அப்பகுதி இளைஞர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள புற்களை சுத்தம் செய்து தருவதாக பள்ளி தலைமை ஆசிரியை சுஜாதா ஷியாமளாவை அனுகியுள்ளனர். அவரும் அதற்கு அனுமதி அளித்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து அந்த இளைஞர்கள் பொக்ளின் இயந்திரம் மூலம் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து கொடுத்துள்ளனர். இதனை வீடியோவாக பதிவிட்ட இளைஞர்கள் தவெக கரூர் மேற்கு மாவட்ட க.பரமத்தி வடக்கு ஒன்றியம் பொறுப்பாளர் வினோத் என குறிப்பிட்டு ரீல்ஸ் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதற்கு ஆசிரியர் அமைப்புகளின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர் (பொறுப்பு) செல்வமணி, அப்பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் தலைமை ஆசிரியை சுஜாதா ஷியாமளா குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக ஊட்கங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.