தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் செப்டம்பர் 27ம் தேதி அன்று சனிக்கிழமை நாமக்கல் மற்றும் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஆரம்பத்தில் சேலம் மற்றும் நாமக்கலில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சேலத்திற்கு பதிலாக கரூர் மாற்றப்பட்டது.
தற்பொழுது, நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. முதலில், மதுரைவீரன் கோவில் அருகே பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் புதிய இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல் கே.எஸ்.தியேட்டர் அருகே விஜய் பிரசாரத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியைத் தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிரசார இடத்தை ஆய்வு செய்துள்ளார். முன்னதாக, நாமக்கல்லில் மதுரைவீரன் கோவில் அருகே பிரசாரம் செய்ய தவெகவினர் தேர்ந்தெடுத்த இடத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.
பிரசாரத்திற்கு காவல்துறையினர் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், இவற்றை பின்பற்றுமாறு தவெக தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, பிரசாரத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்த விவரங்கள் தெளிவாக வெளியிடப்படவில்லை, ஆனால் மற்ற மாவட்டங்களில் விதிக்கப்பட்டவை போல, பேனர்கள், பட்டாசு, அதிக வாகனங்கள் பின்தொடர்தல் ஆகியவற்றுக்கு தடை மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தாமை போன்றவை அடங்கும்.