Skip to content

டியூசனுக்கு செல்லாமல் தலைமறைவான சிறுவன்… மோப்ப நாயுடன் தேடிய போலீஸ்…

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் லக்‌ஷயா பிரதாப் சிங். நேற்று மாலை 5 மணியளவில் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் லக்‌ஷயா, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்று கூறி சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணையை தொடங்கிய போலீசார், சிறுவன் லக்‌ஷயாவின் புகைப்படத்தை அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர். வாட்ஸ்அப் குழுக்களில் சிறுவனின் புகைப்படம் பகிரப்பட்டது. அதோடு பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் தீவிரமாக தேடினர். 

எந்த தகவலும் கிடைக்காததால், மோப்ப நாய்களை வரவழைத்து தேடுதல் பணியை தொடர மாவட்ட எஸ்.பி. ஜிதேந்திர குமார் உத்தரவிட்டார். இதையடுத்து, ‘டோனி’ என்ற மோப்ப நாய் உடனடியாக வரவழைக்கப்பட்டது. சிறுவனின் சட்டையை அந்த மோப்ப நாயிடம் காண்பித்து மோப்பம் பிடிக்க வைத்தனர். சட்டையை மோப்பம் பிடித்த நாய், வேகமாக சிறுவனின் வீட்டில் உள்ள மேல் மாடியை நோக்கி ஓடியது. அங்கு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த ஒரு அறைக்கு முன்பாக நின்று கொண்டு குறைக்கத் தொடங்கியது. போலீசார் பூட்டப்பட்டிருந்த அறைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பார்த்தனர். சுமார் 4 மணி நேரமாக எந்த சிறுவனை காணவில்லை என்று ஊர் முழுக்க தேடினார்களோ, அதே சிறுவன் அங்கு அறையின் ஓரத்தில் நன்றாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தான்.
பின்னர் சிறுவனை எழுப்பி விசாரித்தபோது, வீட்டுப் பாடத்தை முடிக்காததால் டியூசன் வகுப்பிற்கு செல்வதற்கு பயந்து போய், யாருக்கும் தெரியாமல் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் ஒளிந்து கொண்டதாக அப்பாவித் தனமாக கூறினான். சிறிது நேரத்தில் வெளியே வந்து விடலாம் என்று நினைத்ததாகவும், ஆனால் அங்கேயே தூங்கி விட்டதாகவும் சிறுவன் கூறியுள்ளான். சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு போலீசார் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். அதே சமயம், மோப்ப நாயை சரியான நேரத்தில் கொண்டு வந்ததால் தேவையில்லாத நேர விரயம் தவிர்க்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

error: Content is protected !!