லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், அரசியலமைப்பு சட்டத்தின் 6-வது அட்டவணையில் லடாக்கை சேர்க்க வலியுறுத்தியும் பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கடந்த 2 வாரங்களாக உண்ணாவிரதம் மேற் கொண்டு வந்தார். இந்நிலையில் அவரது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு ‘லே அபெக்ஸ் பாடி’ என்ற அமைப்பின் இளைஞர் அணி அழைப்பு விடுத்தது. ஆனால், அது வன்முறையில் முடிந்தது. போலீஸ் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், லே-வில் உள்ள பாஜக அலுவலகத்தையும் தாக்கினர்.
இந்நிலையில், இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட சோனம் வாங்சுக்கின் பேச்சுதான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. வன்முறையால் பாதிக்கப்பட்ட லடாக்கில் காவல்துறை பரிந்துரை பேரில் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து கோரி சோனம் வாங்சுக் 15 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதற்கிடையே வாங்க்சுக் நிறுவிய SECMOL என்ற அரசு சாரா நிறுவனத்தின் FCRA (வெளிநாட்டுப் பங்களிப்பு) உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.