தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். தஞ்சை எம்பி முரசொலி அனைவரையும் வரவேற்று பேசினார். எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை மைய மாவட்ட நூலகத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த
மாணவ மாணவியர்கள் போட்டி தேர்வில் பங்கேற்பதற்காக இங்கு வந்து படிப்பது வழக்கம். இந்த நிலையில் மாணவ மாணவிகளின் வசதிக்காக கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும் என தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலியிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்கும் வகையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டடம் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதனை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மேலும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு முதல் கட்டமாக புத்தகங்களை எம்பி வழங்கினார். பள்ளிகளை தேடி நாடாளுமன்ற உறுப்பினர் திட்டத்தின் கீழ் பள்ளி படிப்புகளை முடித்த மாணவ, மாணவியர்கள் மைய மாவட்ட நூலகத்தில் போட்டி தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்காக தங்கள் புத்தகங்களை நூலகத்தில் வழங்கினர்.
அதைத் தொடர்ந்து தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 49 லட்சம் மதிப்பீட்டில் ஒக்கநாடு மேலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதலாக புதிய இரண்டு வகுப்பறையையும் நேற்று அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.