Skip to content

கிரிக்கெட் மேட்ச்… மனைவியை குத்திக்கொன்ற கணவன்…

இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி அடுத்த கரிஞ்சான்கோடு பகுதியை சேர்ந்தவர் பழனி (56). இவரது மனைவி கஸ்தூரி (53). இந்த தம்பதிக்கு சரண்யா (27), சச்சின் குமார் (26) என்ற மகளும் மகனும் உள்ளனர். பழனி தனது மனைவியின் தங்கை கணவருடன் சேர்ந்து கோயில்களுக்கு நேர்ச்சை தொட்டில் மற்றும் ஓம குண்டலத்திற்கான விறகுகள் தயாரிக்கும் மர வேலை தொழில் செய்து வருகிறார். கஸ்தூரி நாகர்கோவிலில் உள்ள ஒரு கிளவுஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பழனிக்கு அதிக மது குடிக்கும் பழக்கம் இருந்து வருவதாக தெரிகிறது. மது போதையில் வரும் பழனி மனைவி கஸ்தூரியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி கோபித்துக் கொண்டு பழனி வேறு ஊர்களுக்கு சென்று விடுவது உண்டு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று கோபித்துக் கொண்டு சென்ற பழனி கடந்த ஜனவரி மாதம் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். பின்ன நேர்ச்சை தொட்டில் செய்யும் தொழிலை உறவினருடன் வீட்டில் வைத்து செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு பழனி அதிக மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்தபோது பழனியின் மைத்துனரான கஸ்தூரியின் தம்பி ராஜேந்திரன் (45) வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவர் டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார். பழனி வந்ததும் சேனலை மாற்றி செய்திகள் சானலை வைக்குமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபித்துக் கொண்ட ராஜேந்திரன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். தம்பி கோபித்துக் கொண்டதால் அவரை சமாதானப்படுத்த கஸ்தூரியும் கேட்டைத் திறந்து வெளியே வந்து ராஜேந்திரனை சமாதானப்படுத்தினார். அப்போது பின்னால் வந்த பழனி கஸ்தூரியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே பழனி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி கஸ்தூரியின் இடுப்பில் குத்தியதாக தெரிகிறது. கஸ்தூரி அலறியபடி கீழே சரிந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கஸ்தூரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனிடையே கஸ்தூரியை குத்தும்போது நிலை தடுமாறி விழுந்த பழனிக்கும் தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. பழனி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார் கஸ்தூரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிகிச்சை பெற்று வரும் பழனியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

error: Content is protected !!