நமது வீட்டிற்கு வந்தவர்கள் உயிரிழக்க வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள். மிருகம் கூட இதுபோன்று நினைக்காது என கரூர் சம்பவம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார் , “கரூர் சம்பவத்தில் தமிழக அரசு ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியாகவும், எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியாகவும் செயல்படுகிறது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழக அரசு வரலாறு மட்டுமல்லாமல் இந்திய அரசியல் வரலாற்றிலேயே நடைபெறாத ஒரு சம்பவம். கரூரில் விஜய் பரப்புரையின் போது பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. தொடர்ச்சியாக இரண்டு ஆம்புலன்ஸ்கள் வந்தது, மின்தடை ஏற்பட்டது என பல சந்தேகங்கள் ஏற்படுகிறது. கரூரில் நடந்தது போல் இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறக் கூடாது. இது ஒரு பாடம், தன்னைப் பார்க்க வருகிறவர்கள் இறந்து போகனும் என யாரும் நினைக்க மாட்டார்கள், இதுதான் அடிப்படை விசயம். நீதிமன்றம் உத்தரவிட்டம் கரூர் சம்பவத்தில் முறையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இதற்கு டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்டோர் தன்னிலை விளக்கம் வழங்குகின்றனர்.
கரூர் துயரச் சம்பவத்திலிருந்து இந்தியாவே இன்னும் மீளவில்லை. திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து கள்ளக்குறிச்சியில் 65 பேர், செங்கல்பட்டில் 22 பேர், மெரினா கடற்கரையில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெற்றும் தமிழக அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. எதிர்க்கட்சியினர், எதிர்க்கட்சியின் மக்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் மக்களாக பார்த்தால் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல், தற்போது சி பார்மில் 1250 கோடி ஊழல் ஏற்பட்டுள்ளது. பேசும் பொருளாக இருந்த ஊழல் சம்பவங்கள் தற்போது கரூர் சம்பவத்தால் மறைக்கப்பட்டுள்ளது. நமது பிரச்சாரத்திற்கு வந்தவர்கள் உயிரிழந்து விட்டார்கள் என்ற நிலையில் விஜய் மனது என்ன பாடுபடும், பதட்டத்தில் இருக்கும் போது எடுக்கக்கூடிய முடிவு சரியாக இருக்காது, அதனை விமர்சனம் செய்யக்கூடாது. நமது வீட்டிற்கு வந்தவர்கள் உயிரிழக்க வேண்டும் என யாரும் நினைக்க மாட்டார்கள். மிருகம் கூட இதுபோன்று நினைக்காது. கரூர் சம்பவத்திற்கு யார் பொறுப்பு ஏற்பது, யார் மேல் தவறு, எங்கே கோட்டை விட்டது என விசாரணையில் தெரியவரும். கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சொல்வது, அரசியல் செய்வது தற்போது நேரம் இல்லை. லட்சக்கணக்கான அளவில் கூட்டம் வரும், ஆனால் இது போன்ற சம்பவம் நடைபெற்றது இல்லை. கரூர் சம்பவத்தில் நல்ல பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் தான் நமக்கு எஜமானர்கள் என நினைக்க வேண்டும்” என்றார்.