ஜப்பான் நாட்டின் ஆளும்கட்சியான எல்.டி.பி., எனும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைவர் இஷிகெரு இஷிபா கடந்த ஆண்டு அக்டோபரில் பிரதமராகப் பதவியேற்றார். ஜப்பானில் 248 இடங்களை கொண்ட பார்லிமென்டின் மேல்சபை தேர்தல் கடந்த ஜூலையில் நடைபெற்றது.
பெரும்பான்மைக்கு 125 இடங்கள் தேவை. ஆனால் ஆளும் எல்டிபி கட்சி 122 இடங்களில் வென்றது. முன்னதாக கடந்தாண்டு அக்டோபரில் நடந்த பார்லிமென்டின் கீழ்சபை தேர்தலில் எல்.டி.பி., கட்சி பெரும்பான்மையை இழந்திருந்தது. இந்த பின்னடைவுக்கு கட்சி தலைவர் ஷிகெரு இஷிபா பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என அக்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தது. இதனால் பிரதமராக பதவியேற்று ஓராண்டு முடிவதற்குள் ஷிகெரு இஷிபா ராஜினாமா செய்தார்.
கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க 295 எம்பிக்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடந்தது. 5 பேர் போட்டியிட்டனர். இதில், முன்னாள் முன்னாள் பொருளாதார பாதுகாப்புத்துறை அமைச்சர், 64 வயதான சனே தகைச்சி வெற்றி பெற்று LDP கட்சியின் தலைவராக தேர்வானார்.உட்கட்சி தேர்தலில் சனே 183 வாக்குகளும் கொய்சுமி 164 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து லிபரல் ஜனநாயகக் கட்சித் தலைவராக சனே டகைச்சி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று கொண்டார். அவர் ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக
பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சி தலைவரே பிரதமராகவும் இருப்பார் என்பதால், அக்டோபர் 16ம் தேதி நடைபெறும் பார்லிமென்ட் கூட்டத்தில் சனே தகைச்சி பிரதமராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. அதேநேரத்தில் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்காளர்களும் அதிருப்தியில் உள்ளனர். இதுபோன்ற சவால்கள் இருந்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் டகைச்சி வெற்றி பெறுவார் என்றும் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்று கூறப்படுகிறது.