நவராத்திரி பண்டிகையை வடமாநிலங்களில், ‘துர்கா பூஜை’ என்ற பெயரில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தப் பண்டிகையின்போது, துர்கா சிலையை வைத்து வழிபடுவர். பின்னர், அந்தச் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
இந்த நிலையில், ஒடிசாவின் கட்டாக்கில், துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்த நிலையில், அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டாக்கில், கடந்த 3ஆம் தேதி இரவு ஹாத்தி போகாரி அருகே துர்கா பூஜை ஊர்வலத்தின்போது, அதிக சத்தத்துடன் இசைக் கருவிகளை இசைத்ததாக இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதனால் இருதரப்பினரும், ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். மேலும், கட்டாக் நிர்வாகத்தின் உத்தரவை மீறி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், பித்யாதர்பூர் முதல் வன்முறை நடந்த ஹாத்தி போகாரி வரை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
அப்போது கெளரிசங்கா் பூங்கா அருகே உள்ள கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, பொய்யான தகவல் பரப்பப்படுவதைத் தடுக்க கட்டாக் மாநகராட்சி, கட்டாக் வளா்ச்சி ஆணையம் மற்றும் 42 மெளஜா மண்டலம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை இரவு 7 மணி வரையில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பிஎன்எஸ்எஸ் 163 பிரிவு அமல்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிமுதல் அக். 7 (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.