Skip to content

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

  • by Authour

நாகை மாவட்டம், நம்பியார் நகர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மதியம் 2 மணிக்கு சந்திரபாபு மற்றும் சசிக்குமார் ஆகியோருக்கு சொந்தமான 2 பைபர் படகுகளில் 11 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரை மற்றும் தோப்புத்துறை கிழக்கே 26 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் திடீரென மீனவர்களின் படகுகள் மீது வெடிகளை வீசி அச்சுறுத்தியுள்ளனர்.

இதனால் தமிழ்நாடு மீனவர்கள் 11 பேர் சுதாரித்து தப்பிச் செல்ல முயன்ற போது சுற்றி வளைத்த இலங்கை கடற்கொள்ளையர்கள், சரமாரியாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இலங்கை கடற்கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டியதில் நாகை மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த சசிக்குமார், உதயசங்கர், சிவசங்கர், கிருபா, கமலேஷ், விக்னேஷ், விமல், சுகுமார், திருமுருகன், முருகன், அருண் ஆகிய 11 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து படகுகளில் என்ஜின், ஜிபிஎஸ் கருவி, வாக்கி டாக்கி, வலைகள், பிடித்த மீன்கள், தங்க செயின் உள்ளிட்டவைகளை பறித்துக் கொண்டு இலங்கை கடற்கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். எஞ்ஜின்கள் திருட்டு போனதால் மற்ற மீனவர்களின் உதவியோடு கரை வந்து சேர்ந்த நம்பியார் நகர் மீனவர்கள் 11 பேரும், நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

தங்களின் படகுகளின் மீது வெடிகளை வீசி இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாக படுகாயம் அடைந்த மீனவர்கள் தெரிவித்தனர். மேலும், இலங்கை அரசு தான் தாக்க சொன்னதாக கடற்கொள்ளையர்கள் கூறியதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

விலை உயர்ந்த என்ஜின், வலைகள், ஜிபிஎஸ் கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றதால் வாழ்வாதாரம் இழந்து நிற்பதாக கண்ணீருடன் நாகை மீனவர்கள் தெரிவித்தனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் தொடர் கதையாகி வருவதாகவும், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!