Skip to content

ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள இச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். விவசாயி. இவர், சொந்தமாக வீடு கட்டி அந்த வீட்டுக்கு முதலில் தற்காலிக மின் இணைப்பு பெற்றார். அதன் பின்னர் நிரந்தர மின் இணைப்பாக மாற்றுவதற்கு, தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இந்த விண்ணப்பத்தை தாராபுரம் வடக்கு மின் வாரிய வணிக ஆய்வாளர் ஜெயக்குமார் (56) பரிசீலனை செய்தார். வீட்டுக்கு நிரந்தர மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று சிவசுப்பிரமணியத்திடம் ஜெயக்குமார் கேட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவசுப்பிரமணியம், திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து ரசாயனம் தடவிய ஆறு, 500 ரூபாய் நோட்டுகளை சிவசுப்பிரமணியத்திடம் போலீசார் கொடுத்து, அதனை ஜெயக்குமாரிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி சிவசுப்பிரமணியம் அந்த ரூபாய் நோட்டுகளுடன், மின் வாரிய அலுவலகம் சென்று ஜெயக்குமாரிடம் அவர் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜெயக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்தில், போலீசார் சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ.13 ஆயிரத்தை கைப்பற்றினர்.

error: Content is protected !!