Skip to content

திண்டுக்கல் மாவட்ட தவெக செயலாளர் நிர்மல்குமார் கைது… நீதிபதி பற்றி அவதூறு கிளப்பியதால் நடவடிக்கை…

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் தமிழக வெற்றிக் கழக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த மதியழகனை தனிப்படை போலீசார் கடந்த 29-ந்தேதி கைது செய்தனர். மேலும் மதியழகனுக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்திற்காக தமிழக வெற்றிக் கழக கரூர் நகர பொறுப்பாளர் மாசி என்கிற பவுன்ராஜையும் (34) போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து கண்டனங்களை முன்வைத்தார். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. மேலும் அவதூறுகள் பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்படுகினறன.
இந்த நிலையில், நீதிபதி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக திண்டுக்கல் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் எஸ்.எம்.நிர்மல்குமார் என்பவரை சாணார்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!