சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் தீயணைப்புத் துறை சார்பில் பனகல் கட்டிடம் அருகில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 13-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இயற்கையாகவும் மனிதனின் கவனக்குறைவினாலும், தீவிரவாத செயல்களாலும் ஏற்படும் இழப்புகள் இன்னல்கள் போன்ற பேரழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.
அந்த வகையில் தஞ்சாவூரில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடக்கி வைத்தார். இந்த பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். பேரணியில் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், வருவாய் கோட்டாட்சியர் நித்யா, தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் வினோத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.