தென் கொரியாவின் சியோலில் உள்ள உலக டேக்வாண்டோ தலைமையகமான குக்கிவோனால் அங்கீகரிக்கப்பட்ட, குக்கிவோன் டேக்வாண்டோ போட்டி டில்லியில் கடந்த 9 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது..
ஒலிம்பிக் போட்டிகள் உட்பட, சர்வதேச டேக்வாண்டோ போட்டிகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்தியாவில் முதன் முறையாக நடைபெற்ற இதில்,இந்தியா,ஈரான்,தாய்லாந்து,கொரியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்..
இதில் இந்தியா சார்பாக தமிழகத்தில் இருந்து கோவை மாவட்ட டேக்வாண்டோ குழுவை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என 28 பேர் கலந்து கொண்டனர்..
சிறு குழந்தைகள் துவங்கி ,சப் ஜூனியர்,கேடட்,ஜூனியர்,சீனியர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இதில்,பூம்சே தனி மற்றும் இரட்டையர், கிரோகி ,ஸ்பீடு கிக் மற்றும் இ பிரேக்கிங் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன..
சர்வதேச அளவில் நடைபெற்ற இதில் ஆக்ரோஷமாக திறமைகளை வெளிப்படுத்திய கோவை மாவட்ட டேக்வாண்டோ குழுவினர் 64 தங்கம்,18 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என 90 பதக்கங்கள் குவித்து அசத்தியுள்ளனர்..
இந்நிலையில் டில்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை வந்த குழுவினருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது..
இதில் பெற்றோர்கள்,கோவை மாவட்ட டேக்வாண்டோ சங்கத்தினர்,பொதுமக்கள் ஆகியோர் இணைந்து வெற்றி பதக்கங்களுடன் திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்..
இது குறித்து டேக்வாண்டோ சங்க தலைவர் லட்சுமி நாராயணன், பொது செயலாளர் சிஜுகுமார் மற்றும் பயிற்சியாளர் ஆனந்தகுமார் ஆகியோர் கூறுகையில்,ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள டேக்வாண்டோ போட்டிகளில் தமிழக மாணவர்கள் தேசிய,சர்வதேச அளவில் சாதித்து வருவதாகவும்,தமிழகத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பையில் டேக்வாண்டோ போட்டியை இணைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்..
மேலும் டேக்வாண்டோ விளையாட்டிற்கு தேவையான சென்சார் உபகரணங்களை மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்க முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்..
இதனால் டேக்வாண்டோ போட்டிகளில் சிறந்த முறையில் பயிற்சிகளை பெறும் மாணவர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வாய்ப்புகள் இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தனர்…