தஞ்சை மாவட்டம், பட்டுகோட்டை அடுத்த தாமரங்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் நேற்று இரவு பணியிலிருந்த பெண் செவிலியரிடம் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் நோயாளிபோல் வேடமணிந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் உள்ளே நுழைந்து அந்த செவிலியரை தாக்கி அவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். அவர் மீது புகார் கொடுத்து 14 மணி நேரமாகியும் அதிராம்பட்டினம் போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதையடுத்து தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இன்று இரவு தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு திடீரென ஒன்றுதிரண்டு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செவிலியரை தாக்கி, தகாத முறையில் நடக்க முயற்சித்த அருண்குமார் மீது வழக்குப் பதிந்து உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும், செவிலியர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கூறுகையில், இது குறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஏறக்குறைய 14 மணி நேரமாகியும் இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
ஆர்ப்பாட்டம் நடத்தியபிறகு இங்கு வந்த பட்டுக்கோட்டை போலீஸ் டி.எஸ்.பி ரவிச்சந்திரன் நாங்கள் சம்மந்தப்பட்ட குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறி சென்றுள்ளார். சம்மந்தப்பட்ட குற்றவாளி மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை அனைத்து செவிலியர் சங்கங்களையும் ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுப்போம் என்று கூறி தற்போதுவரை தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வாயிலில் செவிலியர்கள் காத்திருக்கின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.