Skip to content

சிபிஐ அதிகாரிகள் கரூர் வருகை

  • by Authour

கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்ட நிலையில் ஐபிஎஸ் பிரவீன்குமார் தலைமையிலான குழுவினர் கரூர் வந்துள்ளனர் – விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர்.

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். தமிழக அரசு சார்பில் இது தொடர்பான வழக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டு, அந்த குழுவானது தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தடை செய்ய வேண்டும் என்றும், சிபிஐ அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 13ம் தேதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. கரூர் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார், விசாரணை நடத்த கரூர்

வந்துள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ளனர்.

பிரவீன்குமார் ஐபிஎஸ் தலைமையில், ஏடிஎஸ்பி முகேஷ்குமார் மற்றும் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் கரூர் வந்துள்ளனர். கரூர் வந்துள்ள சிபிஐ அதிகாரிகளிடம் எஸ்.ஐ.டி வசம் உள்ள ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டு, இன்றோ அல்லது நாளையோ விசாரணையை துவங்கலாம் என்று கூறப்படுகிறது. முதல் கட்ட விசாரணையை சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல்.

error: Content is protected !!