அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழ்நாட்டின் அரசியல் களம் இப்போதே சூடாகியுள்ளது. ஏனென்றால், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் கோவில் அருகே உள்ள தனியார் அரங்கில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிக்கான அமமுக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டார்.
கூட்டம் முடிந்த பிறகு, தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து, வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்தார். இந்தப் பேச்சு, திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகளின் கூட்டணி உத்திகளைப் பற்றி புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது. தேர்தல் களத்தில் கூட்டணி அமைப்பு குறித்து தினகரன் தெளிவுபடுத்தினார். “வருகிற தேர்தலில் விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமைய வாய்ப்புள்ளது. விஜயின் தலைமையிலான கூட்டணியுடன் சேர்த்து 4 முனை போட்டி அமையும். எங்கள் தலைமையில் கூட்டணியா அல்லது வேறொரு கூட்டணியில் இணைவோமா என்பது விரைவில் தெரியும்” என்று அவர் கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திரும்பத் திரும்ப விஜயை கூட்டணிக்கு அழைப்பதைப் பார்த்தால், தங்களால் தனித்து நிற்க முடியாது என்பதால் அழைப்பு வருவதாக தினகரன் கருதுகிறார். “எதிர்பாராத வகையில் கூட்டணி அமைவதும் வாய்ப்பு உள்ளது” என்று சேர்த்து, அரசியல் களத்தில் புதிய சாத்தியங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், அதனை தொடர்ந்து, திமுக அரசின் சமீபத்திய சட்டத் திருத்தத்தை தினகரன் கடுமையாக விமர்சித்தார். “அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிக்கும் சட்டத் திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று அவர் கோரினார். அமலுக்கு வந்தால், மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, இலவசக் கல்வி, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் நிறுத்தப்படும் என்று எச்சரித்தார்.
மேலும், தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தினகரன் அழைப்பு விடுத்தார். “வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன், திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அது மட்டும்தான் மக்களின் எதிர்பார்ப்பு. நிறைவேற்றினால் மட்டும்தான் தேர்தலில் மக்களைச் சந்திக்க முடியும்” என்று அவர் பேசினார்.