உணவு தேடி சத்தமின்றி தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானை வேட்டையன் : வாழைத், தென்னை மரங்களை சூறையாடியது – வீட்டிற்கு முன்பு வைத்து இருந்த அரிசி மாவை ருசித்த சி.சி.டி.வி காட்சிகள் !!!
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமங்களில் உணவு தேடி யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் உலா வருகிறது.
இதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் மனிதர்களை அச்சுறுத்தி சேட்டையில் ஈடுபட்டு வந்த ரோலக்ஸ் என்ற ஒற்றை காட்டு யானையை வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். மேலும் நேற்று முன்தினம் குப்பேபாளையம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவமும் அரங்கேறியது.
இந்நிலையில் தடாகம் சுற்று வட்டார பகுதிகளான வரப்பாளையம் பகுதியில் கும்கி யானைகள் இருந்ததை கண்டு

அப்பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்டு மனித உயிர்களையும் சேதப்படுத்தி வந்த வேட்டையன் கடந்த சில மாதங்களாக வராமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வரபாளையம் தமிழரசன் என்பவர் தோட்டத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு இருந்த வாழைத், தென்னை மரங்களை சேதப்படுத்தியது. அத்துடன் அருகே உள்ள செட்டியார் தோட்டத்திற்குள் சென்ற அந்த ஒற்றை காட்டு யானை வேட்டையன் வீட்டிற்கு முன்பு வைத்து இருந்த அரிசி மாவை ருசித்தது. அது அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மீண்டும் வேட்டையன் ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

