துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சி.பி.ராதாகிருஷ்ணன், தனது சொந்த ஊரான திருப்பூருக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகிறார். முன்னதாக நாளை கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், மாலையில் திருப்பூர் வருகிறார். திருப்பூர் ரெயில் நிலையம் முன் உள்ள குமரன் சிலை, மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ஷெரீப் காலனியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று தாயாரிடம் ஆசி பெறுகிறார். அதன்பிறகு பிச்சம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்கிறார்.மறுநாள் (புதன்கிழமை) காலை சந்திராபுரத்தில் உள்ள குலதெய்வமான பாலைமரத்து அய்யன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்கிறார். பின்னர் முத்தூர் செல்லாண்டியம்மன் கோவில், சின்னமுத்தூர் செல்வகுமாரசாமி கோவில், அத்தாத்தா முத்தாத்தா செல்லாத்தா கோவில், முத்தூர் அத்தனூர் அம்மன் குப்பண்ணசாமி கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர் காலை 11.30 மணிக்கு திருப்பூர்- தாராபுரம் ரோட்டில் உள்ள வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் அனைத்து தொழில் அமைப்பினர், தன்னார்வலர்கள், அனைத்து கட்சியினர் சார்பில் நடக்கும் பாராட்டு விழாவில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு முடிந்ததும் மாலையில் அங்கிருந்து கோவை சென்று சிறப்பு விமானம் மூலமாக மதுரை செல்கிறார்.
துணை ஜனாதிபதி திருப்பூர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் திருப்பூர், காங்கயம் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் வேலாயுதசாமி திருமண மண்டபம், பாலைமரத்து அய்யன் கோவில், பிச்சம்பாளையம் டாலர் தோட்டம், குமரன் சிலை, காந்தி சிலை, ஷெரீப் காலனி, முத்தூர் செல்லாண்டியம்மன் கோவில், சின்னமுத்தூர் செல்வகுமாரசாமி கோவில், அத்தனூர் அம்மன் குப்பண்ணசாமி கோவில், துணை ஜனாதிபதி பயணிக்கும் அனைத்து வழிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்து கலெக்டர் மனிஷ் நாரணவரே உத்தரவிட்டுள்ளார்.

