அமெரிக்காவின் லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையம் அருகே விமானம் கோர விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. சரக்கு விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தின் லூயிஸ்வில்லில் உள்ள விமான நிலையத்திலிருந்து, புறப்பட்ட விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. யுபிஎஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
புறப்பட்ட நேரத்தில் விமானத்தின் எரிபொருள் அளவு முழுமையாக இருந்ததால், அடுத்த நொடியே அந்த பகுதி முழுவதும் பிரமாண்ட தீப்பிழம்பு ஏற்பட்டு விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்தது. அந்த ஓடுபாதையின் முடிவில் இருந்த ஒரு கட்டிடத்தின் மீதும் விமானம் மோதியுள்ளது.

