Skip to content

தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்டில் மேயர் திடீர் ஆய்வு

  • by Authour

தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும் புகார்கள் வந்தது. இந்த நிலையில், தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் மேயர் சண்.ராமநாதன் இன்று (புதன்கிழமை) காலை திடீரென ஆய்வு செய்தார். அப்போது நடைமேடையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்த வியாபாரிகளிடம் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கடைகளை அமைக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், நடைமேடைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அங்கு பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்களிடம் நீங்கள் எந்த பள்ளியில் படிக்கிறீர்கள்? காலதாமதம் ஆகி விட்டது இன்னும் பள்ளிக்கு செல்லவில்லையா? என கேட்டு, நன்கு படிக்குமாறு கூறினார்.

அப்போது தஞ்சையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்க்கும் பெண்கள், நாங்கள் வெளியூரில் இருந்து இங்கு வேலைக்கு வருகிறோம்‌. எங்களுக்கு பணி இரவு 9 மணிக்கு முடிவடையும். அதன் பிறகு, நாங்கள் வீட்டிற்கு செல்வதற்கு நீண்ட நேரம் ஆகிறது என்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட கடையின் மேலாளரை மேயர் சண்.ராமநாதன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து, அங்குள்ள கழிவறைக்குள் சென்று தூய்மையாக இருக்கிறதா? என பார்வையிட்டார். மேலும், பஸ் நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, 25-வது வார்டு கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி, நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தஞ்சை பழைய பஸ் நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக வந்த புகாரை அடுத்து இன்று காலை ஆய்வு செய்தோம். அப்போது நடைமேடையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்த வியாபாரிகளிடம் பயணிகள் நடந்து செல்ல இடையூறு ஏற்படாத வகையில் கடைகள் அமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, வருகிற திங்கட்கிழமை இதேப்போல், ஆய்வுக்கு வருவோம். அப்போது அகற்றப்படாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போல, நடைமேடைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், அங்குள்ள பொது கழிவறையால் அருகில் உள்ள மண்டபத்தில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, அந்த கழிவறையை வேறு இடத்திற்கு மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!