அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தில் கடந்த 11-ம் தேதி திருச்சியிலிருந்து வீட்டு உபயோக சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அரியலூரை நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த லாரி கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிலிண்டர்கள் ஒன்றோடு ஒன்று உரசி வெடித்துச் சிதற தொடங்கியது.
ஏறக்குறைய 4 நான்கு கிலோமீட்டர் அளவிற்கு பயங்கர சப்தமும், 100 மீட்டர் உயரத்திற்கு தீ பிழம்பும் எழுந்து பொதுமக்களை கடும் பீதிக்குள்ளாக்கியது.
இந்த பயங்கர விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் இல்லாத நிலையில், லாரி ஓட்டுநர் கனகராஜ் காயங்களுடன் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் விபத்து நடைபெற்ற வளைவு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டீசல்

ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரி ஒன்றும் நிலை தடுமாறி கழிந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகி இருந்தது. தற்போது மீண்டும் அதே பகுதியில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும் விபத்துக்குள்ளாகி வெடித்து சிதறியுள்ளது.
இதனால் வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் வாரணவாசி விநாயகர்

கோவில் அருகே உள்ள வளைவு பகுதிக்கு முன்பாகவே பேரி கார்டுகள் அமைத்து வரும் வாகனங்கள் மெதுவாக செல்லும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் ஒளிரும் சிவப்பு விளக்கு கம்பங்களும், சாலையின் ஓரங்களில் நடப்பட்டுள்ள தடுப்பு கற்களில் ஒளிரும் சிவப்பு வண்ண ஸ்டிக்கர்களையும் காவல்துறையினர் ஒட்டி உள்ளனர்.
விபத்து நடந்த பகுதியில் சிலிண்டர் வெடிப்பு அதிர்வில் சேதமடைந்த கொள்ளிடம் குடிநீர் குழாய் சீரமைப்பு பணியும் தற்போது முடியும் நிலையில் உள்ளது. அந்த இடத்தில் சேதம் அடைந்த மின் கம்பத்திற்கு பதிலாக புதிய மின் கம்பமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

