தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் கூறியதாவது;-
“தே.மு.தி.க. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. எங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட சின்னம் முரசு தான். அந்த முரசு சின்னத்தில்தான் தே.மு.தி.க. வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவார்கள். வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வருபவர்கள் தாராளமாக வரலாம். ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ என்றுதான் தமிழ்நாட்டிற்கு பெயர் உள்ளது. இங்கு வருபவர்கள் வேலை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளலாம்.
ஆனால் வாக்கு செலுத்துவதை அவரவர் சொந்த மாநிலத்தில் செய்வதுதான் முறையாக இருக்கும். இதில் தே.மு.தி.க.வுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
கூட்டணி விவகாரத்தில் எந்த ரகசியமும் கிடையாது. இன்று அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து பேசியிருக்கிறோம். கடலூரில் தே.மு.தி.க. மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு முன்பு மீண்டும் ஒருமுறை மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசுவோம். அவர்களிடம் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது குறித்து கருத்து கேட்டு, அதன்படி கூட்டணி அமைப்போம். இது தொடர்பான அறிவிப்பை மாநாட்டிற்கு முன்பு பத்திரிகையாளர்களிடமோ, அல்லது மாநாட்டிலேயே கூட அறிவிப்போம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

