சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையில் டீக்கடை நடத்தி வருபவர் மோகன் (வயது 56). இந்த நிலையில் நேற்று இவரது கடைக்கு வந்த ஒரு முதியவரை தெரு நாய் கடிக்க வந்ததாக கூறப்படுகிறது. இவர் அந்த நாயை விரட்ட முயன்றுள்ளார். அப்போது இவரையும் தெரு நாய் கடிக்க வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மோகன் கட்டையை எடுத்து தெரு நாயை சரமாரியாக அடித்து கொன்று அந்தப் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் தூக்கி வீசியுள்ளார். இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தெரியவந்தது.
இதனையடுத்து திருவான்மியூரை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் கீர்த்தனா என்பவர் இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் டீக்கடை உரிமையாளர் மோகன் மீது *பி. என். எஸ். 325 – விலங்குகளை கொல்லுதல்* என்ற பிரிவின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொல்லப்பட்ட தெரு நாய், வேப்பேரி கால்நடை மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை பரிசோதனை செய்யப்படுகிறது.

