திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த காய்கறி வளாகத்தில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே இடம் வழங்க வேண்டும்,பஞ்சப்பூர் புதிய காய்கறி வளாகம் குறித்து தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என்று காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த காய்கறி வளாகம் குறித்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எம்.காதர் மைதீன், செயலாளர் என்.டி..கந்தசாமி, பொருளாளர் ஜி.வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில்,
அவைத் தலைவர்கள் யு.எஸ்.கருப்பையா, ஜி.பாலசுப்பிரமணி,
ஒருங்கிணைப்பாளர் வி.என் கண்ணதாசன்,இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.டி முகமது சபி,ஆலோசகர்கள் ஏ.தங்கராஜ்,கலீல் ரகுமான், எஸ்.பி.பாபு,கே ஆர்.ராஜா,ஏ.எம்.பி.அப்துல் ஹக்கீம்,இணைச்செயலாளர் ரஜினிகாந்த் மற்றும் திரளான வியாபாரிகள் மாவட்ட கலெக்டர் வே.சரவணனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்திருந்ததாவது;
திருச்சி மாநகரில் சுமார் 2300 வியாபாரிகளின் குடும்பங்கள், விவசாயிகள், சுமைப்பணி கூலியாட்கள், மகளிர் வியாபாரிகள் என சுமார் 10,000 குடும்பங்கள் முழுக்க முழுக்க காந்தி சந்தையை நம்பி பிழைத்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட நிர்வாகம் கடந்த 29.6.2024ம் தேதியன்று காந்திசந்தையை சார்ந்த சில வியாபாரிகளை மட்டுமே அழைத்து மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நடத்திய கூட்டத்தில், திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் புதியதாக காய்கனி வணிக வளாகம் கட்டப்போகிறோம் என தெரிவிக்கப்பட்டது. அந்த வணிக வளாகம் குறித்த வரைபடம் எங்களுக்கு திருப்தியில்லை எனக்கூறி வெளிநடப்பு செய்தோம். இதுகுறித்து அமைச்சர் நேருவிடம் முறையிட்டோம். அவரும் வியாபாரிகளின் விருப்பப்படி பஞ்சப்பூர் புதிய காய்கனி வணிகவளாகம் கட்டுமான பணி நடைபெறும் என வாக்குறுதி அளித்தார்.
ஆனால் இவை அனைத்துக்கும் மாறாக, வியாபாரிகளான எங்களை கலந்து ஆலோசிக்காமல் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாகம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், காந்தி சந்தையை சார்ந்த சுமார் 10,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கவலையில் உள்ளோம்.
எனவே, தற்போது பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய காய்கனி வளாகம் எதற்காக? யாருக்காக? கட்டப்படுகிறது என்பதையும், தற்சமயம் வியாபாரம் நடைபெற்று வரும் திருச்சி காந்தி மார்க்கெட்டின் நிலைமை குறித்தும் விரிவான விளக்க அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். பின்னர், திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எம்.காதர் மைதீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருச்சி மாநகரில் 6.40 ஏக்கரில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட் தொடர்ந்து செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. மார்க்கெட்டை சுற்றிலும் உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மண்டிகளுக்கு பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த வளாகத்தில் எவ்வளவு இடம் தேவை என்பது குறித்து வியாபாரிகளிடம் கேட்டு அந்த அளவு கடைகளை அமைத்துத்தர வேண்டும். மேலும், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த காய்கனி வணிக வளாகத்தில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே இடம் வழங்க வேண்டும். மற்றவர்களை அங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது.
உருளை, வெங்காயம், தக்காளி மண்டிகளுக்கு 16 டயர்கள் உள்ள லாரிகளில்தான் சரக்குகள் வரும். இந்த வாகனங்கள் வந்து செல்லும் வகையில் உரிய சாலை வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். இதற்கு வியாபாரிகளுக்கு என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்து எழுதிகொடுக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
காந்தி மார்க்கெட்டை சுற்றிலும் காணப்படும் ஆக்கிரமிப்புகளால் மொத்த வியாபாரத்துக்கு கடும் நெருக்கடி இருந்து வருகிறது. மொத்த வியாபாரத்தை பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த வளாகத்துக்கு மாற்றினால் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் வாங்க வரும் வியாபாரிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த காய்கறி வளாகம் செயல்பாட்டுக்கு வந்தாலும், காந்தி மார்க்கெட்டும் செயல்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். ஆனால், பஞ்சப்பூரில் எந்தெந்த கடைகள் செயல்படும், காந்தி மார்க்கெட்டில் எந்தெந்த கடைகள் செயல்படும் என்று தெளிவான பதில் அளிக்கப்படவில்லை. இதனால், பஞ்சப்பூர் மார்க்கெட் தொடர்பான குழப்பம் தீரவில்லை.
காந்தி மார்க்கெட் அருகே உள்ள மகளிர் சிறையை மாற்றுவதற்கு இடம் பார்த்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதன்படி, மகளிர் சிறையை இங்கிருந்து மாற்றிவிட்டு அந்த இடத்தில் சில்லறை வியாபாரத்துக்கும், தற்போது உள்ள மார்க்கெட்டை மொத்த வியாபாரத்துக்கும் ஒதுக்கீடு செய்தால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

