Skip to content

வி.சேகர் உடலை பார்த்ததும்! கண்ணீர் விட்டு கதறிய சிவக்குமார்!

  • by Authour

கடந்த 10 நாட்களுக்கு மேலாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மாலை காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“நீங்களும் ஹீரோதான்” படத்தின் மூலம் 1990-இல் இயக்குநராக அறிமுகமான வி.சேகர், ‘பொண்டாட்டி சொன்னா கேட்கணும்’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ உள்ளிட்ட குடும்ப படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர். வடிவேலுவையும் விவேக்கையும் ஒரே படத்தில் நடிக்க வைத்த பெருமைக்குரியவர்.

திருவண்ணாமலை அருகே உள்ள நெய்வாநத்தம் கிராமத்தில் எஸ்.வெங்கடேசன்- பட்டம்மாள் தம்பதிக்கு பிறந்த இவர், திருவண்ணாமலையில் பியூசி படித்தார். ஏவிஎம் ஸ்டுடியோவில் கருப்பு வெள்ளை 16 எம்.எம்.லேப்பில் உதவியாளராக 19 வயதில் வேலைக்கு சேர்ந்தார்.

பிறகு, மாநகராட்சி சுகாதாரத் துறையில் 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். வேலை செய்து கொண்டே மாலை நேரத்தில் நந்தனம் கலைக் கல்லூரியில் பி.ஏ.பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. படிப்பை முடித்தார்.

பின்னர் பகுதி நேரமாக எடிட்டர் லெனினிடம் உதவியாளராக சேர்ந்தவர். இயக்குநர் கே.பாக்யராஜின் உதவியாளர் கோவிந்தராஜ் இயக்கிய “கண்ண தொறக்கணும்சாமி” படத்தில் உதவி இயக்குநராக இருந்தார்.

பிறகு கே.பாக்யராஜின் உதவியாளராக இரு ஆண்டுகள் கதை இலாகாவில் பணியாற்றினார். இவரது முதல் “நீங்களும் ஹீரோதான்”. இந்த படம் வெற்றியடையவில்லை. இதையடுத்து சுகாதார பணிக்கே திரும்பினார். பின்னர் அங்கிருந்து வந்த அவர், ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’, ‘பொறந்த வீடா புகுந்த வீடா’, ‘பார்வதி என்னை பாரடி’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘நான் பெத்த மகனே’, ‘காலம் மாறிப் போச்சு’, ‘பொங்கலோ பொங்கல்’, ‘விரலுக்கு ஏத்த வீக்கம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

தனது மாமா மகள் தமிழ்ச் செல்வியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மலர்க்கொடி என்ற மகளும் காரல் மார்க்ஸ் என்ற மகனும் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இவருக்கு திடீரென நெஞ்சு வலி வந்து மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர். இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு ரத்தம் செல்லாததால் அவர் கண்களை மூடியபடியே இருந்தார். அவரது உடல்நலம் தேறி வர வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு மகன், கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இயக்குநர் வி.சேகர் காலமானார். அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு இயக்குநர் பி.வாசு, ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

வி.சேகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் சிவக்குமார் வந்தார். அவரது மகன் காரல் மார்க்ஸிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்னதை கேட்டு சிவக்குமாருக்கு அழுகை வந்ததும், காரல் மார்க்ஸும் அவரை கட்டி பிடித்து அழுதார். பின்னர் சிவக்குமாரை பார்த்தும் சேகரின் மனைவி கதறி அழுதார். அவருக்கும் சிவக்குமார் ஆறுதல் கூறினார். வி.சேகரின் இயக்கத்தில், “பொறந்த வீடா புகுந்த வீடா” என்ற படத்தில் சிவக்குமார் நடித்திருந்தார். வி.சேகரின் உடல் நெய்வாநத்தம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவருக்கு உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படுகின்றன.

error: Content is protected !!