எத்தியோப்பியா -ஆபார் பிரதேசத்தில் உள்ள ஹேலி குப்பி என்ற சிறிய கவச எரிமலை நவம்பர் 23 அன்று அதிகாலை திடீரென வெடித்தது. கடைசியாக இது சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டது என்பதால் இந்த வெடிப்பு உலக அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வெடிப்பின் போது 13 முதல் 15 கிலோமீட்டர் உயரம் வரை எரிமலை சாம்பலும் சல்பர் டை ஆக்சைடு வாயுவும் வெளியேறின. இந்த சாம்பல் குவியல் வலுவான மேல் காற்றோட்டத்தில் சிக்கி வடக்கு-கிழக்கு திசையில் சுமார் 100-120 கி.மீ. வேகத்தில் பயணித்து, சிவப்புக் கடலைத் தாண்டி சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் கடந்து வட இந்தியாவை வந்தடைந்தது.
நவம்பர் 24 காலை முதல் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் வானம் மங்கலாகவும் புழுதி நிறைந்ததாகவும் காட்சியளித்தது. ஏற்கனவே குளிர்கால மாசால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லியில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 450-ஐத் தாண்டி “மிகக் கடுமையான” நிலைக்கு சென்றது. எரிமலை சாம்பலில் உள்ள நுண்ணிய கண்ணாடித் துகள்களும் சல்பர் வாயுவும் சுவாசப் பிரச்சினைகளை மோசமாக்கியதால் மக்களுக்கு வெளியே செல்ல வேண்டாம், N95 முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.
விமானப் போக்குவரத்து மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எரிமலை சாம்பல் விமான இன்ஜின்களை சேதப்படுத்தும் தன்மை கொண்டது என்பதால் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வடமேற்கு வான் பகுதிகளில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது வேறு வழியில் திருப்பி விடப்பட்டன. டெல்லி, அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், அகமதாபாத், சண்டிகர் ஆகிய விமான நிலையங்களில் பல மணி நேரம் தாமதமும் ரத்தும் ஏற்பட்டன.
இந்திகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா, அகாசா ஏர் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் லுஃப்தான்சா, எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் போன்ற சர்வதேச விமான நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன. டுபாய் விமான நிலையம் கூட சில மணி நேரம் மூடப்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையமும் வோல்கானிக் ஆஷ் அட்வைசரி சென்டரும் (VAAC) இணைந்து சாம்பல் குவியலை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
நவம்பர் 25 இரவு வரை இந்தப் பாதிப்பு நீடிக்கும் என்றும் அதன் பிறகு காற்றோட்டம் திசை மாறுவதால் சாம்பல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து விலகும் என்றும் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் எத்தியோப்பியாவில் அருகிலுள்ள எர்தா அலே எரிமலை தொடர்ச்சியிலும் சிறு அளவிலான செயல்பாடுகள் தொடர்வதால் மேலும் சாம்பல் வெளியேற வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

