ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் 605 கோடி ரூபாயில் முடிவுற்ற பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததுடன் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது,
ஒரு கோடியே 14 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்குகிறோம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் ரூ.1000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அதோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 68.85 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், ஈரோடு மாவட்டத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 9,327 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
உங்களின் அனைத்து கோரிக்கைகளையும், வேண்டுகோளையும் நான் நிச்சயம் செய்து கொடுப்பேன். உங்களுக்கு ஒரு கவலையும் வேண்டாம். மக்களுக்கும் கழக அரசுக்குமான பாசப்பிணைப்பைப் பார்த்து, அதைக் கெடுக்க சதி செய்கிறார்கள். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் மக்களின் வாக்குரிமையையே பறிக்கலாமா என்று பார்க்கிறார்கள்.
நீங்கள் எல்லோரும் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இப்போது அதுதான் இருப்பதிலேயே மிக மிக முக்கியமானது! ஏனென்றால், திராவிட மாடல் 2.0 உறுதியாகிவிட்ட ஒன்று! கழக ஆட்சிதான் மீண்டும் அமையும்! தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தங்கு தடையின்றி இரு மடங்கு வேகத்துடன் தொடரும்! அதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

