மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரஜத். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நேஹா (24) என்ற பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. ரஜத் செல்போனில் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாக இருந்துள்ளார். அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தவாறு பப்ஜி விளையாடியுள்ளார். இதனால், நேஹாவுக்கும் ரஜத்திற்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்லுமாறு கணவனை நேஹா தொடர்ந்து வற்புத்து வந்துள்ளார்.
இந்நிலையில், வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து பப்ஜி விளையாடுவது தொடர்பாக கடந்த சனிக்கிழமை இரவு ரஜத்திற்கும் நேஹாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரஜத் தனது மனைவி நேஹாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.
நேஹா கொல்லப்பட்டது குறித்து ஞாயிற்றுக்கிழமை காலை கிராமத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைந்து சென்ற போலீசார் நேஹாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ரஜத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

