இந்தியாவிற்கு வருகை தரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க தனக்கு அனுமதி மறுத்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்தியா – ரஷ்யாவின் 23-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இன்று மாலை டெல்லி வருகிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும், அதிபர் புதினுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிலையில், அதிபர் புதினை சந்திக்க தனக்கு அனுமதி மறுத்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெளிநாட்டுத் தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்துப் பேசுவது மரபாக இருந்து வந்தது. முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக் காலங்களிலும் இது கடைப்பிடிக்கப்பட்டது.ஆனால், தற்போது வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும்போதும் அல்லது நான் வெளிநாடு செல்லும்போதும், எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதை அரசு விரும்புவதில்லை. இந்தியா வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை, பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சகமும் எதிர்க்கட்சிகளிடமிருந்து விலக்கியே வைத்துள்ளது,” இவ்வாறு கூறினார்.

