கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரண்டப்பள்ளி அருகே மாரசந்திரத்தை சேர்ந்தவர் ஹரீஷ் (32).அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவரான பிரசாந்த் என்பவரிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். ஹரீஷ் கார் டிரைவராக மட்டும் அல்லாமல் ரியல் எஸ்டேட் தொழிலும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இதற்கிடையே ஹரீசுக்கும், ஓசூர் வானவில் நகரை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அந்த பெண் கணவரை பிரிந்து மகன், மகளுடன் வாழ்ந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற ஹரீஷ் அங்கேயே சாப்பிட்டார். பின்னர் அங்கிருந்து ஸ்கூட்டரில் வானவில் நகர்-அண்ணாமலை நகர் இடையே சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மாருதி நகர் பகுதியில் ஹரீசை வழிமறித்து அரிவாளால் வெட்ட முயன்றனர்.
இதில் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த ஹரீஷ் உயிர் பிழைக்க தப்பி ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் விடாமல் துரத்தி சென்று சரமாரியாக அவரை அரிவாளால் வெட்டி தள்ளியது. இதில் கை, தலை உள்பட பல இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு ஹரீஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
நேற்று காலை நடைபயிற்சி சென்ற பொதுமக்கள் ஹரீஷ் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள், கொலை செய்யப்பட்ட ஹரீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் விவகாரத்தில் ஹரீஷ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது ரியல் எஸ்டேட், வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தலையிட்டதால் கொலை செய்யப்பட்டாரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

