திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்திலிருந்து, மலை உச்சியில் அமைந்துள்ள பழமையான தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், மலை உச்சியில் உள்ள தீபத் தூண் அருகே தர்கா இருப்பதால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் எனக் கூறி மதுரை காவல்துறையினர் அங்கு தீபம் ஏற்ற அனுமதிக்க மறுத்தனர்.
இதையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் விதித்த 144 தடை உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தீபத் தூணில் உடனடியாகத் தீபத்தை ஏற்றுமாறு நேற்று இரண்டாவது முறையாக உத்தரவிட்டார். இதன் காரணமாகத் திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் திரண்டனர். ஆனால், மதுரை காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவையும் மீறி தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டிருக்கும் பதிவில்,
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?
மக்கள் முடிவு செய்வார்கள் என முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், மெட்ரோ இரயில், AIIMS, புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள், இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது என கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி இரண்டு நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

