தமிழக அரசியலில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி, நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவரை காங்கிரஸ் கட்சியின் முக்கிய வியூக வகுப்பாளரான பிரவீன் சக்கரவர்த்தி நேரில் சந்தித்துப் பேசியதுதான். சென்னை பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் நேற்று இரவு நடந்த இந்தச் சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்ததாகத் தெரிகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் சாத்தியமான கூட்டணி, தொகுதிப் பங்கீடு, ஆட்சியில் பங்கு ஆகியவை பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தச் செய்தி உடனடியாக சமூக வலைதளங்களில் பரவி “காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு விலகி விஜய்யுடன் போகிறதா?” என்ற கேள்வியை எழுப்பியது. விஜய் ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியப் பதவிகளும் அதிகத் தொகுதிகளும் தரப்படும் என அறிவித்திருப்பதால், திமுகவுடன் தொகுதி பேரத்தில் அதிருப்தி கொண்டிருக்கும் காங்கிரஸ் தரப்பு தவெகவை மாற்று வழியாகப் பார்ப்பதாகவும் பேச்சு அடிபட்டது. இந்தச் சந்திப்பு காங்கிரஸ் மேலிடத்தின் அறிவுறுத்தலுடன் நடந்ததா, அல்லது பிரவீன் சக்கரவர்த்தியின் தனிப்பட்ட முயற்சியா என்பது தெரியவில்லை என்றாலும், தமிழகத்தில் புதிய கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகப் பேசின.
குறிப்பாக தென் மாவட்டங்களில் விஜய்க்கு இருக்கும் இளைஞர் ஆதரவையும், காங்கிரஸின் சிறுபான்மையினர் வாக்கு வங்கியையும் இணைத்தால் திமுகவுக்கு பெரும் சவாலாக மாறும் என்ற கருத்தும் வலுவாக எழுந்தது. இந்தச் செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழக அரசியல் களமே “விஜய்-காங்கிரஸ் கூட்டணி” என்ற ஒரு வார்த்தையைச் சுற்றி பேசத் தொடங்கியது.
ஆனால் இன்று காலை சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.செல்வப்பெருந்தகை இந்தச் சந்திப்பை முழுமையாக மறுத்தார். “விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவர்த்திக்கு நாங்கள் எந்த அனுமதியும் தரவில்லை; அவரிடம் பேசவும் சொல்லவில்லை. இந்தச் சந்திப்பு குறித்து எங்களுக்குத் தெரியாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் “இந்த விஷயம் குறித்து காங்கிரஸ் மேலிடத்துடன் பேச உள்ளோம்” என்றும் கூறினார்.

